பரமண்டல ஜெபம்

தேவனிடம் நாம் பேசுவது, தேவன் நம்மோடு பேசுவது என்று இரண்டும் இணைந்த அனுபவமே ஜெபம். ஆவிக்குறிய வாழ்வின் தொடக்க காலங்களில், நாம் மட்டுமே அவரோடு பேசிக்கொண்டிருப்பது போன்று தோன்றினாலும், பின்னர் அவரும் நம்மோடு பேசும் உரையாடலாக ஜெபங்கள் மாறுவதை, நாம் அனுபவித்து மகிழ்வது உறுதி. அதன்பின், நம் ஜெபங்களும் முறைப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களாகவும், பெறும் பதில்களை ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சியான அனுபவங்களாகவும் மாறுவதை இந்த இறைஉறவில் உறுதி செய்துகொண்டே இருப்போம்.
இயேவின் சீடர்கள் அவரது ஜெபவாழ்வை அருகில் இருந்து பார்த்தனர். அவரது ஜெபம் வெறுமனே எனக்கு அதைக்கொடும் இதைகொடும் என்று இல்லாமல் வித்தியாசமாகவும் ஆழமானதாகவும் இருந்ததை உணர்ந்தனர். “நீங்கள் ஜெபிக்கும் போது இறைவனது உறவை அறியாதவர்களைப் போல அலப்புவது அவசியமில்லை என்றும், உங்கள் தேவைகள் எல்லாம் உங்கள் வாயினின்று சொல் பிறவாததற்கு முன்னரே அவர் அறிந்தவராக இருக்கிறார்”, என்றும் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, அவரது ஜெபங்கள் பிதாவை மையமாகக் கொண்டஒன்றாக இருப்பது இருப்பதைச் சீஷர்கள்கண்டுகொண்டவுடன், தங்களுக்கும் ஜெபிக்க கற்றுக் கொடுக்க இயேசுவிடம் வேண்டிக்கொண்டனர்.
அப்போது நம்மை மையப்படுத்தியதாக இல்லாமல், இறைவனை மையப்படுத்தி ஜெபிக்கும் அருமையான ஜெபத்தைக் கற்றுக் கொடுத்தார். இறை உரையாடல்களுக்கெல்லாம் நல்ல மாதிரி நமக்கு அருளப்பட்டதே பரமண்டல ஜெபம்.

உறவின் ஜெபம்

உலகில் வேறு எந்த மதமும் போதிக்காத தனித்த தன்மையாக இறைவனுடன் நமக்குள்ள உறவை தகப்பன்-பிள்ளைகள் என்ற உறவாக கிறிஸ்தவம் சித்தரிக்கிறது. இறைவனைத் தன்பிதா என்று அழைத்ததுமல்லாமல், நம்மையும் அந்த உறவுக்குள், “எங்கள் பிதாவே” என்று அழைக்கச் சொல்லி இயேசு ஒரு குடும்ப உறவை நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.
இயேசுவை இரட்சகராக ஏற்பவர்கள் அத்தனை பேருக்கும் பிதாவின் குடும்பத்தில் பிள்ளைகளாகும் அதிகாரம் பாக்கியமாகக் கிடைக்கிறது (யோவான் 1:12) என்று இறைஉறவை ஒரு குடும்ப உறவாக மாற்றுகிறார் . எனவே, இயேசுவுக்கும், அவரது இரத்தத்தால் விலைக்கிரையம் செலுத்தி மீட்கப்பட்டு பிதாவின் குடும்பத்தில் நுழையும் நம் ஒவ்வொருக்கும், ஒரே தகப்பன் தான். இது எத்தனை சிலாக்கியமான சத்தியசத்தியம்!

நாம் பெற்றிருப்பது புத்திரர்களாகச் சுவிகாரத்தின் ஆவி (ரோமர் 8:15 )
அதோடு மட்டுமின்றி, பரமண்டலங்களில் இருக்கிற பிதாவை கேட்கும் நாம், நம்முடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிப் பெற்றுக்கொள்வோம் என்றும், உங்களுக்காக நானும் பிதாவைக் கேட்டுக்கொள்வேன் என்று சொல்லவேண்டிய அவசியமேயில்லை என்றும் இயேசு தம்முடைவர்களுக்கு உறுதி அளித்திருக்கிறார். நமக்கும் பிதாவுக்கும் அன்பின் உறவு இடையேயான இயேசுவுக்கும் பிதாவுக்கும் இடையேவான உறவைப்போன்றதே என்றும் அதற்காக தாம் தொடர்ந்து பிதாவை வேண்டிக் கொள்வதாகவும் சொல்லிச் சென்றார். மட்டுமல்ல, இன்றும் நமக்காக அந்த தகப்பனாரிடம் பரிந்துபேசும் நம் மூத்த சகோதரராக கிறிஸ்து இயேசு இருக்கிறார். இந்த உறவைச் சரியாகப் புரிந்துகொண்டால், உரிமையுடன் ஜெபிக்கலாம்.

உம் பெயருக்கே புகழ்

தன்னைப் பெற்றவர்களின் பெயருக்குப் புகழ் சேர்ப்பதே ஒரு மகனின் அல்லது மகளின் கடமை. நமக்கெல்லாம் முன்மாதிரியான நம் கிறிஸ்துவும் பிதாவின் சித்தத்திற்கு முற்றும் கீழ்ப்படிந்தவராய் அதைத்தான் செய்தார். காரணம் தேவன் எதைச் செய்தாலும் அதைத் தன் நாம மகிமைக்காக, அதாவது அவரது பெயருக்குப் புகழ்ச்சி வருவதற்காகத்தான் செய்கிறார். ஆகவே, இந்தக் குடும்பத்தில் அங்கத்தினர்களாக இருக்கும் நாமும்கூட, இயேசுவைப் போலவே நம் பிதாவின் பெயருக்குப் புகழ் சேர்க்கவே தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறோம். உம் நாமம் பரிசுத்தப்படுவதாக என்றால், உம் பெயருக்கே மகிமை, மாட்சிமை, புகழ், துதி என்று அனைத்தும் உரித்தாகுக என்று முழுமனதோடு நாம் செயல்படுவது. அதாவது, நம் எண்ணங்கள், செயல்பாடுகள் வழியாக அவரது பரிசுத்தமான குடும்பத்தின் பெயரை உயர்த்த விரும்பி அர்ப்பணிப்பது.

தேவனது பல்வேறு தன்மைகளுல் மையமானது அவரது பரிசுத்தம். இதனால்தான், இயேசு தான் முற்றும் பரிசுத்தராக வாழ்ந்து மட்டுமல்லாமல், பாவத்தில் இருந்த மனிதரை பரிசுத்தராக்கத் தம்மையே தந்ததன்மூலம் தன் பிதாவின் பரிசுத்த நாமத்துக்குப் புகழ் சேர்த்தார். அதைபோல்தான் அவரது குடும்பத்தின் மற்ற பிள்ளைகளான நாமும் இருந்தாக வேண்டும். இதற்காகவே, அவரது இரத்தால் நம்மைத் தினமும் கழுவி, தம் வார்த்தையின் வல்லமையால் வழிநடத்தி, பரிசுத்த ஆவியானவரின் உதவியைத் அருளி, நாமும் அவரைபோல பரிசுத்தராக வாழ்ந்து தேவனது பரிசுத்த நாமத்தை நம் வாழ்வின் மூலமும் உயர்த்த விரும்புகிறார். இப்படி ஒரு பிள்ளையாக அனுதினமும் அவர் நம்முடன் இணைந்து அதைச் செய்யத் துணையும் புரிகிறார். எனவே, பரிசுத்த குடும்பத்தில் பரிசுத்தத்தை வாஞ்சித்துப் போற்றி வாழ்பவர்களே “உமது நாமம் என்மூலமாகவும் பரிசுத்தப்படுவதாக”, என்று போற்றிப் புகழவும் முடியும்.

இராஜாவும் அவர் இராஜ்ஜியமும்.

சாமுவேலை வேண்டாம் என்று ஒதுக்கிய இஸ்ரவேலர் அவர்களுக்கு என்றும் இராஜாவாக இருக்கச் சித்தம்கொண்ட இராஜாதிராஜாவாகிய தேவனைத்தான் ஒதுக்கினார்கள்( 1 சாமுவேல் 8). அவர்கள் விரும்பிய இராஜாவும் இராஜ்ஜியமும் இந்த உலகத்துக்குறியதாக மட்டுமே இருந்தது. ஆனால், இயேசு தம்முடைய இராஜ்ஜியத்தைக் குறித்துப் பிரசங்கிக்கவும், தம் இரட்சிப்பைக் கண்டவர்களை அவரது இராஜ்ஜியத்தில் சேர்த்துக்கொண்டு ஆள்பவராகவும் பூமிக்கு வந்தார். என்றாலும், கிறிஸ்துவின் இராஜ்ஜியம் நம் கண்கள் காணும் இவ்வுலகத்துக்குறியது அல்ல. மாறாக அவரது நிரந்தரமான, அழியாத, சரீரக் கண்களால் காணப்படாத, வல்லமையான ஆவிக்குறியதான இராஜ்ஜியம் அவருடையது. இதில் அவரது இரட்சிப்பைப் பெற்ற அனைவரும் குடிமக்கள். அவரது சரீரத்தில் இணைக்கப்பட்ட இருதயங்களே அந்த இராஜ்ஜியத்தின் எல்லை. இது இவ்வுலகில் காணப்படாததாகத் துவங்கினாலும் அவருடன் நிரந்தரமாகக் காணப்படுவதாக இருக்கப் போகும் ஒன்று.

உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக என்ற விண்ணப்பம் பூமியின் குடிகள் அனைவருக்குமே சத்தியம் அறிவிக்கப்பட்டு, அவர்களுக்குள்ளும் நம் தேவ இராஜ்ஜியம் வரட்டும் என்கிற பேரன்பான இறைவிருப்பம். மேலும், இன்று உலகம் பொல்லாங்கனுக்குள் கிடந்தாலும், சகலத்தையும் புதிதாக்குகிறவராக (வெளி 21:5) வரப்போகிறவர் காணப்படும் இராஜ்ஜியத்தை புதிய பூமியில் ஸ்தாபித்து சிங்காசனத்தில் வீற்றிருப்பவராக அரசாளுவார்.

சத்தியத்தை அறிவித்து அவரது இராஜ்ஜியத்தை விரிவாக்கும் பணியில்தான் இன்று நாம் இருக்கிறோம். இப்படி நம்மால் அவரது இராஜ்ஜியம் கட்டப்பட்டு வர நம்மைத் தம்மோடு அவர் இணைத்துக் கொண்டது நமக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் கிடைத்திருக்கும் ஆசிர்வாதம். இதை விரும்பி இப்படி ஜெபிக்கும் ஒவ்வொரும் இறையரசின் ஊழியரே.

இறைவிருப்பம் செய்பவர்களாக

தேவசித்தம் என்றால் இறைவனது விருப்பம் அல்லது வாஞ்சை. நீதி என்றால் சரியானது. தேவ நீதி என்றால் தேவனது கண்ணோட்டத்தில் அவருக்குச் சரியாகப்படுவது. தேவனோ நீதியைச் செய்யச் சித்தம்கொண்டவராக இருக்கிறார் (யோவான் 5:30) என்றால், அவர் என்னாளும் சரியானதை மட்டுமே செய்ய விருப்பம் கொண்டவராக இருக்கிறார் என்று பொருள்.

அவர் வீற்றிருக்கும் பரமண்டலத்தில் அவருடைய விருப்பம் மட்டுமே நடக்கிறது. அதுபோல இந்தப் பூமியிலும் தன் இராஜ்ஜியத்தின் பிள்ளைகள் வாழ்வில், தன்னுடைய விருப்பத்தை மட்டுமே நிறைவேற்ற ஒரு இராஜாவாகவும் தந்தையாகவும் அவர் விரும்புகிறார். நம் தனிப்பட்ட வாழ்விலும், குடும்பம், சபை மற்றும் நாம் வாழும் சமுதாயத்திலும்கூட இறைவனது சித்தமாக, அவரது விருப்பங்கள் மட்டுமே செயல்படவேண்டும் என்பதுதான் நம் ஜெபமாக இருக்கமுடியும்.

பூமியிலும் அவர் சித்தம் செய்யப்படுவதாக என்றால் அச்சித்தம் அவரது குடும்பத்தின் பிள்ளைகளான நம்மிடம் இருந்தே துவங்கிச் செய்யப்படவேண்டும். அப்படிச் செய்யப்பட நம் வாழ்வில் சரிசெய்யப்படாமல் இருக்கும் பகுதிகள் முதலில் தேவ நீதியால் சரி செய்யப்படுவது நடக்கும். அதாவது, தேவன் சரியென்று அனுமதிக்கும் செயல்களைமட்டுமே செய்யவேண்டும் என்பது நம் விருப்பமாக மாறுவதே சரியற்றவைகளைச் சரிசெய்யச் சரியான வழி. அதற்கு எழுதிக்கொடுக்கப்பட்ட அவர் வார்த்தைகள் வழியாக, அவர் சித்தத்தை மனோவாஞ்சையுடன் அறிந்து செய்வதே இந்த நாளிலும் நம் விருப்பமாக இருக்கவேண்டும்.

வார்த்தை-அப்பம்

தேவன் வனாந்திரத்தில் அப்பத்தைத் தந்து தன் மக்களை ஆச்சரியமாகப் போஷித்தார். அதுவும் 40 வருடங்களாக, குறைவின்றி. அதே வனாந்திரத்தில்தான் தேவன் தன்னுடைய வார்த்தைகளை கட்டளைகளையும் நியாப்பிரமாணங்களாகவும் கொடுத்தார். இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாயினும் இஸ்ரயேலர் அவரது அப்பத்தைத் துச்சமாக மதித்ததார்கள். அதுமட்டுமல்லாமல், வார்த்தையாகிய அப்பத்தையும் அவர்கள் தங்கள் இருதயத்துள் ஏற்றிக் கொள்ளவில்லை. இதனால்தான், மனிதன் அப்பத்தால் மட்டுமல்ல, தேவனுடைய வார்த்தையாலும் பிழைப்பான் என்று கிறிஸ்து அவர்களுக்கு மீண்டும்நினைவுபடுத்தினார். அதோடு மட்டுமல்லாமல், தானே அந்த நித்திய ஜீவனைத் தரும் ஜீவ அப்பம் அல்லது ஜீவ வார்த்தை என்று வெளிப்படுத்தினார்.
வார்த்தையான அவரை ஏற்றுக் கொண்டு, அவரது வார்த்தைகளை தம் வாழ்வில் கொள்ளும் எவருக்கும் நித்திய ஜீவன் உண்டு என்பதுதான் வாக்குத்தத்தமான வார்த்தையும் கூட. அப்பம் சரீரத்துக்குறிய உணவு. வார்த்தையாகிய அப்பமோ ஆத்துமாவுக்குறியது. இந்த ஆத்தும அப்பம் மட்டுமே ஒரு மனிதனை ஆவிக்குறியவனாக உணரச் செய்கிறது. தொடர்ந்து வாழவும் வைக்கிறது. எனவே வார்த்தை இன்றி வாழ்வு இல்லை.
எப்படி ஒரே நாளில் நாம் எல்லா உணவையும் உண்டுவிடுவதில்லையோ, அதேபோல் இறைவார்த்தையும் ஒரே நாளில் கிடைத்துவிடுவதில்லை. அவருடைய வார்த்தையாகிய அப்பம் ஒவ்வொரு நாளுக்கும் உரியது. இதை விளங்கிக்கொண்ட எவரும் இந்த அப்பத்தை தங்கள் வாழ்வெல்லாம் உணவாக்கிக் கொள்வர். அன்றள்ள அப்பத்தை இன்று எங்களுக்குத்தாரும் என்று வெறும் சரீரத் தேவைக்கான வேண்டுதலாக மட்டும் பார்க்காமல், ஆத்துமா செழிக்கச் செய்யும் இறைவார்த்தை என்று அறிந்துகொள்வீர்களானால், ஆவிக்குறிய வாழ்வு செழிக்கும். அவர் வாழ்வின் வனாந்திரங்களில் எல்லாம் நம்மை செழிப்பாகப் போஷிக்கத் தந்திருப்பதே நம் கையில் இருக்கும் வேதம்.

குற்றங்களை மன்னியும்

இரட்சிப்பின் அடிப்படையே மன்னிப்புதான். மன்னிப்பு என்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் இன்று நானும் நீங்களும் கிறிஸ்தவர் இல்லை. கிறிஸ்துவின் மன்னிப்பே நம்மை இன்று பிதாவின் முன்பாக அவருடைய குடும்பத்தில் நிற்கச் செய்து இருக்கிறது. மன்னிப்பைப் பெற்று இரட்சிப்பின் அனுபவத்துக்குள் நுழைந்த ஒருவருக்கு மட்டும் தான், மன்னிப்பின் மகத்துவமும் முக்கியத்துவமும் சரியாகப் புரியும். அதுவும் மன்னிக்கப்பட தகுதியே இல்லாத ஒருவர் தான் பெற்ற மன்னிக்கப்பட்ட மன்னிப்பின் தன்மையை முழுவதுமாக அறிவார். அன்பின் மிகுதியால், விலையேறப்பெற்ற இரத்தால் பெற்ற மன்னிப்பு அது. நம்மை பிதாவின் முன்பாக நிற்கத் தகுதியாக்கிய இரட்சிப்பு அல்லவா அது?
இப்படி கிறிஸ்துவின் இரத்தத்தினால் மன்னிப்பைப் பெற்று கழுவப்பட்டு நிற்கிற நாம் எல்லோரும் ஒருவகையில் மன்னிப்பை மற்றவர்களுக்கும் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். காரணம், மன்னிப்பை அறிந்தவர்களால் மட்டுமே மற்றவர்களை மனதார மன்னிக்க முடியும் என்பதற்காகவும்தான் நம்மை இறைவன் மன்னித்தார். எனவே, கிறிஸ்தவர்கள் என்பவர்கள் மன்னிக்கிறவர்கள். தகுதியற்ற தன்னை மன்னித்துவிட்ட அதே வகை இறைவனது மன்னிப்பை மற்றவர்களுக்கும் காட்ட தயங்காதவர்கள். அந்த மன்னிப்பு எல்லா எரிச்சல்களையும், கசப்புக்களையும் புறம்பே தள்ளிய அன்பின் அடிப்படையிலானது என்பதை எத்தனைமுறை மன்னிக்க வேண்டிய சூழல் வந்தாலும் மறக்காதவர்கள்.
பிறர் குற்றங்களை நாங்கள் மன்னிப்பது போல எங்களுக்கு மன்னியும் என்று இயேசு மொழிந்தது, மற்றவர்களை நாம் மன்னிப்பவர்களாக இருந்து, நாம் அதே மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தான். ஒரு சகோதரனையும் ஒரு சகோதரியையும் மன்னிக்க முடியாத ஒரு கிறிஸ்தவன் இன்னமும் கிறிஸ்துவின் மன்னிப்பின் மாட்சிமையை அதாவது தான் பெற்ற இரட்சிப்பின் மகத்துவத்தையும் முழுமையாக அறியாதவராகிவிடுகிறார். ஆகவே, நாம் மன்னிப்போம். நாம் பெற்ற இரட்சிப்பை அறிந்து பூரணப்படுவோம்.

சோதனைக்குள் செல்லாமல்

சோதனை என்பது கிறிஸ்தவத்தில் இல்லை, கிறிஸ்தவர்களுக்கு தீமை வருவதில்லை என்று இறைவன் எந்த சிறப்பான வாக்குறுதியையும் அளிக்கவில்லை. பாவம் நுழைந்த உலகம் பொல்லாங்கனுக்குள்ளும் கிடக்கிறதால்(1 யோ 5:19) பூமியில் சோதனைகளும் உண்டு. தீமைகளும் உண்டு. எனவே, எனக்கு சோதனை வராமல் காத்துக்கொள்ளும், தீமையே அண்டாமல் தடுத்துவிடும் என்ற ஜெபங்களுக்கு எல்லா நேரங்களிலும் பதில் கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட ஜெபங்களையும் மீறி அவை நம்மை அணுகத்தான் செய்கின்றன. இதற்குக் காரணம் தேவன் அவற்றைக் கேட்பதில்லையா என்றால், ஆம், அவரது சித்தத்திற்கு மீறிய ஜெபங்களுக்கு அவர் பதில் அளிப்பதில்லை என்பதுதான் உண்மை. சோதனைகளும் தீமைகளும் நம்மை அணுகுவது நம்மை வீழ்த்த அல்ல, வெற்றி பெற்று உயர்த்த. அதே சமயம் தேவன் நம்மைப் பொல்லாங்கால் சோதிக்கிறவர் அல்லர் என்றும் அறிந்திருக்கவேண்டும் (யாக் 1:13). மாறாக, நம் வாழ்வில் வரும் தீமைகளை அவரால் நன்மையாக முடியப்பண்ண இயலும் என்பதுதான் உண்மை (ஆதி 50:20).

அப்படியானால் கிறிஸ்து கற்றுக் கொடுத்த ஜெபத்திற்கு அர்த்தம் என்ன? ஒரு கிறிஸ்தவன் சோதனைக்குள் செல்லும்போது அதில் விழுந்துபோகாமல் நிலைத்து நிற்கவும், சோதனையில் தோற்றகடிக்கப்பட்டவர்களாகத் தீமையால் வெல்லப்பட்டவர்களாகவும் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. காரணம், சோதனைகளை ஜெயித்தவரும், சிலுவையில் வெற்றி சிறந்தவருமான கிறிஸ்து நம்மை சோதனைகளில் விழுந்துவிடாமல் காக்கவும், தீமைகளை வென்றவர்களாகப் பிரகாசிக்கிறவர்களாகவும் மாற்றக் கிருபை அளிக்க வல்லவராக இருக்கிறாரே!. ஆக, இந்த ஜெபத்தின் அர்த்தம் அவரது கிருபையை விரும்பி வாஞ்சிப்பதின் அடிப்படையிலானது.
பாவத்தில் இருந்து மீட்டவரான கிறிஸ்துவே, தீமை நம்மை அணுகினாலும், அதில் இருந்து நம்மைக் காத்து மீட்க வல்லவராகவும் இருப்பதால், பிதாவிடத்தில் நம்மைச் சமர்பித்து சோதனைகளிலும், தீமைகளிளும் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டிக்கொள்ள சலியுறுத்துகிறார். எனவே, நாம் பொல்லாங்கை எதிர்த்து நின்று வென்றவர்களாக, கிறிஸ்துவின் வெற்றியுள்ள நாமத்தைத் தரித்துக் கொண்டவர்களாக அவருடன் இருப்பது இந்த வேண்டுதலுக்குக் கிடைக்கும் பலன். அப்போது ஆவிக்குறிய வாழ்வில் இன்னும் முதிர்ச்சி பெற்றவர்களாகக் காணப்படுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *