என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்!

Crying Christian

காத்திருப்பு கடினம். சில நிமிடம் கம்யூட்டர் boot ஆகும் நேரம் என்றாலும் சரி,  ஒரு அலுவலகத்தில் வரவேண்டியவர் வந்து உட்காரவேண்டியவர் வரும் வரை அந்த சீட்டையே பார்த்துக்கொண்டிருப்பதும் சரி… கடினம்தான். எனக்கு பில்லிங் கவுண்டர்களில் காத்திருப்பது கொஞ்சம் சலிப்பையும் உண்டுபண்ணும். பொருளை வாங்கிக் காசு கொடுக்கக் காத்திருக்க வேண்டுமா? என்று நினைப்பதுதான் காரணம்! வாட்ஸப்பில் இரண்டு ப்ளூடிக்குகள் வரும்வரை காத்திருக்கமல் ஃபோன் போட்டுவிடுபவர்கள் உண்டு.

காத்திருப்பு அவஸ்தை!.  காரணம் அது நம்மிடம் இருக்க வேண்டிய, ஆனால் இல்லாத அடிப்படை குணமான பொறுமையுடன் சம்பந்தப்பட்டது. வேதம் பொறுமையை மட்டுமல்ல, நீடிய பொறுமையைப் பற்றியும் பேசுகிறது. பொறுமையை ஆவியின் கனியாகக் காட்டுகிறது. 

ஆதிப்பிதாக்கள் கொஞ்சம் தேவன் வரும் வரை காத்திருந்திருக்கலாம். அவர் வந்த அன்று அவரிடம் “இப்படி ஒரு ஆசாமி வந்திருந்தான்… இப்படியெல்லாம் கேட்டான்…” என்று சொல்லி இருந்தால் விஷயம் இன்ன என்று மீண்டும் தான் சொன்னதை தேவன் விளக்கியிருக்கத்தான் செய்வார். அவர்களுக்கு என்ன அவசரமோ, தேவன் வைத்திருந்த ஒரு அடிப்படை குணமான பொறுமையை விட்டுவிட்டார்கள். காத்திருப்பது என்பது வீழ்ச்சியில் இருந்தே கடினமான ஒன்றாகிவிட்டது.

தேவனுக்காகக் காத்திருப்பது என்பது இரட்சிப்பின் அனுபவத்தில் இருக்கும் கிறிஸ்தவருக்கும் கடினமானதுதான். ஆனால், வேதாகமத்தில் காத்திருந்த எவருக்கும் அந்தக் காத்திருப்பு வீணாகப் போகவில்லை. ஆபிரகாம், யோசேப்பு என்பவர்கள் பளிச் சென்று வரும் உதாரணங்கள். ஆபிரகாமுக்காவது ஒரு வாக்குத்தத்தம் கிடைத்தது. யோசேப்புக்கு அப்படி ஏதும் கிடைக்கவில்லை. ஒரு சொப்பனம் கிடைத்து என்றாலும், அது பளிச் சென்ற ஒரு வாக்குத்தத்துக்கு ஈடாகாது. வியாக்கியானம் தன் சொந்த வியாக்கியானமோ என்று கூட சந்தேகித்திருக்கு இடம் இருக்கும் அளவுக்கு அவருடைய வாழ்வின் காத்திருத்தல் மிகக்கடினமான ஒன்றாகவும் இருந்தது.

அப்படியானால், பொறுமையுடன் காத்திருப்பைக் கையாளுவது எப்படி? சில சத்தியங்களை மனதில் இருத்தினால், காத்திருத்தல் நம்மை ‘ஒரு வழி’ பண்ணிவிடுவதைத் தவிர்க்கலாம்: 

  1. வேதாகமம் காத்திருத்தலை மறுக்கவில்லை. அதை லேசான விஷயமாகவும் சொல்லவில்லை. நெடுநாள் காத்திருத்தல் இருதயத்தை இளைக்கப்பண்ணும் என்று தெரிவித்திருக்கிறது. அத்துடன் காத்திருத்தலைக் கற்றும் தருகிறது.  எனவே, காத்திருப்பது வேதத்தின்படி நமக்கு நடக்கக்கூடியதே என்பதை அறிந்திருத்தல் அவசியம். அப்படி அறிந்திருந்தால், ஜெபிக்கிற பொழுதே நடத்துவிடவேண்டும் என்று நினைத்து அது நடக்காதபோது நாம் வேதத்தின்படி ஜெபிக்கவில்லை என்றெல்லாம் கருதவேண்டிய அவசியம் வராது. 
  1. ஒட்டுமொத்த மனுக்குலத்துக்குமே காத்திருத்தல் என்பது வீழ்ச்சியில் இருந்து துவங்கிவிட்ட ஒன்று. ஆனால், தேவன் காலத்தின் அருமையை நம்மைவிட நன்றாக அறிந்தவர் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அவர் எல்லாவற்றையும் அதினதின் காலத்தில் செய்கிறவர் மட்டுமல்ல; நேர்த்தியாகவும் செய்கிறவர். இன்னும் சரியாகச் சொன்னால், அவர் செய்பவை நேர்த்தியாக இருப்பதற்குக் காரணமே ஏற்ற காலத்தில் அவர் அவற்றைச் செய்வதுதான். இதையும் விளங்கிக் கொள்ள முயற்சிக்கவேண்டும்.
  1. நம் வாழ்நாட்கள் பல ஆயிரம் வருடங்கள் அல்ல என்பதை தேவன் அறிவார். இங்கே எவ்வளவுகாலம் இருக்க வேண்டும் என்பதை அவர் ஏற்கனவே நிர்ணயித்திருக்கிறார். இப்படி கிறிஸ்துவுக்குள் இருப்பவருக்கு காலங்கள் தேவனுடைய கரத்தில் இருப்பதாலும், தேவன் நம் வாழ்நாள் குறுகியதாக இருந்தாலும் நாம் உயிரோடு இருக்கும்போதே தம் திட்டங்களை நிறைவேற்ற வல்லவர். இதைத் தெரிந்து கொண்டால்  எங்கே காத்திருப்பிலேயே வாழ்நாள் வீணாகிவிடுமோ என்று அஞ்ச வேண்டியதில்லை.
  1. நம்முடைய இயலாமைகளை அறிந்தவர் நம் தேவன். என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும் என்கிற தாவீதின் ஜெபத்தில் இருந்த வருத்தத்தின் ஆழத்தை அறிந்தவர்.  ‘என் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு’ என்று சொல்லி திரிபவர்கள் நாம் என்பதையும் தேவன் அறிவார். இந்த இயலாமைகளில் அவர் நம்மைப் பார்த்து இரசித்துக்கொண்டிருப்பதில்லை. மேலும், காத்திருப்புகளை அர்த்தமற்றதாகப் போகவும் விடுவதில்லை. தம்முடைய நோக்கம் நம்மில் நிறைவேற மிகுந்த ஆவலுள்ளவராகவே இருக்கிறார். அப்படியானால், தேவனுக்காகக் காத்திருத்தல் நன்மை என்பதை நம் இருயத்துள் கொண்டு சென்றாக வேண்டும். 
  1. தேவன் மாயம் செய்து காலத்தைக் குறுக்கிவிடுபவர் அல்ல. எனவே, காத்திருப்புக் காலங்களும் நாளுக்கு 24 மணி நேரம் என்றுதான் நகர்கிறது. தேவன் அற்புதங்கள் செய்பவர் என்றாலும் இயல்பாக நகரும் நேரத்தை அற்புதம் செய்து சுருக்கிவிடுவதில்லை.  மாறாக நம்முள் அந்த நேரங்களில் பல அற்புதங்கள் செய்கிறார். 
  1. சில விஷயங்கள் நமக்கு விளங்கிவிடுவதில்லை. சில விஷயங்களை நாம் பெற்றுக்கொண்டாலும், அவற்றின் நோக்கம் புரிவதில்லை. ஆனால், காத்திருப்புதான் நம்முள் விளக்கத்தையும் நோக்கத்தையும் கற்றுத்தருகிறது. தேவன் இந்தக் காலங்களில்தான் நம்மை இன்னமும் அதிகமாக அவருக்குள் வளர்க்கிறார். அவருடைய நோக்கத்தை விளக்குகிறார். 
  1. இவ்வளவு நாள் காத்திருத்தல் வீணாகிவிட்டதே. தேவன் செய்வார் என்று நினைத்ததை செய்யாமல் விட்டுவிட்டாரே என்று அங்கலாய்க்கும் வாய்ப்புகள் வருவதில்லை. கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப்போவதில்லை.! இப்படிக் காத்திருப்புகளைச் சரியாக தியானித்து வைக்க முடிந்தால் வாழ்க்கை காத்திருப்புகள் கொண்டுவரும் இடைவெளிகளால் நிரம்பி இருக்காது. இடைவெளிகள் எல்லாம், நன்மையான பல விஷயங்களால் நிரம்பி இருக்கும்.

இந்த வாழ்நாளுக்குள் நம்மைப் படைத்து இந்து பூமியில் சிலவருடங்கள் இந்தபூமியில் உலாவ விட்டதேன், படைத்த நோக்கத்தையெல்லாம் நம்மில் நிறைவேற்றி,  நம்மை மகிமைப்படுத்தவும், அதன் வழியாக அவர் மகிழவும் வல்லவர். எனவே, தாமதம் என்று நினைக்காமல், காத்திருத்தலில் விரக்தி அடையாமல் நம் நாட்கள் அவருக்குள் இணைந்திருக்கிறதா என்பதை மட்டும் அவர் கிருபையால் தொடந்து கற்றுக் கொண்டால் போதும். நம்மில் நல்ல பல செயல்களை துவங்கிய அவர், காத்திருப்புகாளால் ஏமாற்றம் அடையாமல் அவற்றையெல்லாம புரியவைத்தே நடத்தியும் முடிப்பார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *