
முன்குறிப்பு: இதுவரை ஒருமுறைகூடக் கேள்விப்பட்டிராத ஜனங்களுக்கான நியாயத்தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது எனக்கு வந்த ஒரு சந்தேகம். அது, மேலும் அறிய சில வருடங்கள் முன்னர் ஒரு தேடலைத் துவக்கியது. உதாரணமாக, எவரும் நுழைய இயலாத அமேஸான் காடுகளுக்குள் வசிக்கும் மக்கள் இயேசு என்கிற பெயரைகூடக் கேள்விப்படாதிருந்தால் அவர்கள் நித்திய வாழ்வு அதோகதிதானா என்கிற கேள்வி!. எனவே, சிலவருடங்களுக்கு முன்னர் அதை அறிந்து ஒரு கட்டுரையாக எழுதவும் செய்தேன். (ஆனால், அதை இங்கு பதிவிடவில்லை). ஆனால், அப்போதைய தேடலில் அறிய நேர்ந்த ஒரு பெயர் டான் ரிச்சர்ட்ஸன்!
டான் ரிச்சர்ட்ஸன் சுவிசேஷப் பணிகளுக்கும் அப்பாற்பட்ட பணியை செய்த ஒரு கிறிஸ்தவ மிஷனரி. கனடாவில் பிறந்த இவர், உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் கூட்டங்களுக்குக் கிறிஸ்துவின் நற்செய்தியை கொண்டு செல்ல வேண்டிய கடமை தனக்கு இருப்பதாக தன் உணர்ந்தார். தூரக்கிழக்கு நாடுகள் அப்படிப்பட்ட பல பழங்குடி மக்களை உள்ளடக்கியது. இந்தோனேசியத்தீவுகள், பாப்புவா நியூகினியா, சாலமோன் தீவுகள் போன்றவையெல்லாம் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர்தான் அறியப்பட்டன. ஆனால் அதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் குடியேறி நாகரிக உலகுக்கு மறைந்து வாழ்ந்து வந்தார்கள். இன்றுகூட அப்படிப்பட்ட மறைந்து வாழும் சில மக்கள் கூட்டங்கள் உண்டு. நம் நாட்டில்கூட அந்தமான் தீவுகள் அப்படிப்பட்ட மக்களை உள்ளடக்கியது. செண்டினல் தீவு வேற்று மனிதர் நுழைந்திராத பகுதி.
தன் அந்த அழைப்பை உணர்ந்த டான் ரிச்சர்ட்ஸனது வரலாறு வெறும் பயணம் மற்றும் சாகசக் கதை மட்டுமல்ல, அது கிறிஸ்தவத்தின் உலகளாவிய உண்மைகள் எவ்வாறு மிக தொலைதூர கலாச்சாரங்களிலும் ஒத்துப்போகின்றன என்பதற்கான ஆழ்ந்த ஆய்வு. சில ஆச்சரியங்களையும் உள்ளடக்கியது.
சிறு வயது முதலே இருந்த தேடல்:
சிறு வயதிலிருந்தே, டான் மிஷனரிகளின் கதைகளால் கவரப்பட்டார். இந்த ஆர்வம் அவரை கிறிஸ்தவ விசுவாசத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள தனது வாழ்க்கையை அர்ப்பணிக்க வழிவகுத்தது. விரிவான இறையியல் பயிற்சிக்குப் பிறகு, அவரும் அவரது மனைவி கேரோலும் (Carol), நவீன நாகரிகத்தால் பெரிதும் தீண்டப்படாத பகுதியான பப்புவா மற்றும், இந்தோனேசியாவின் தொலைதூரப் பகுதிகளுக்குப் புறப்பட்டனர்.
ஸ்ஸாவீ பழங்குடியினருக்கான பயணம்:
1962 ஆம் ஆண்டில், டான் மற்றும் அவரது மனைவி கரோல் ஜாய் ரிச்சர்ட்சன் இருவரும் தங்கள் கைக்குழந்தையுடன் இந்தோனேசிய நாட்டில் உள்ள ஒரு பகுதியான இரியான் ஜெயாவை அடைந்தனர். அங்கே இன்னும் பயணித்து ஸ்ஸாவீ (Swai) என்னும் ஆதிகுடியினர் வசிக்கும் பகுதியையும் சென்றடைந்தனர். அங்கே அவர்களைச் சந்தித்தபோது அவர் சந்தித்த சவால் மிகவும் வினோதமானது.
ஸ்ஸாவீ பழங்குடியினர் தங்களது சிக்கலான கலாச்சாரம் மற்றும் பழங்குடியின மோதல்களுக்கு பெயர் பெற்றவர்கள். எப்படி என்றால் அவர்கள் துரோகம் செய்வது என்பதை ஒரு நற்பண்பாக கருதும் அளவுக்குச் சிக்கலானவர்கள். இன்னும் ஆச்சரியமான விஷயம் என்றால், கஅவர்கள் “கழுத்தறுப்புக்காவே நட்பை வளர்த்தல்!” என்று இந்தச் செயலுக்கு ஒரு பெயரிட்டுக் கூட அழைத்தனர் (ஆங்கிலத்தில் சொன்னால் Fattening with friendship for the slaughter!) இப்படிக் கிறிஸ்தவ போதனைகளுக்கு முற்றிலும் எதிரான மதிப்பீடுகளைக் கொண்ட இம்மக்களுக்கு ‘அன்பும் நீதியுமுள்ள இறைவனின் நற்செய்தியை தெரிவிப்பது எவ்வாறு?’ என்பது ரிச்சர்ட்சன் குடும்பத்தாருக்கு ஒரு பெரிய சவாலாகவே அமைந்தது.
சமாதானக் குழந்தை:
சிலகாலம் சென்றபின்பு அவர்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக நட்பைச் சம்பாதித்து (ஆம், அபாயமான நட்புதான்!)அங்கேயே வாழவும் துவங்கினர். இதற்காக அவர்களின் மொழி மற்றும் பழக்கவழக்கங்களையும் கற்றுக்கொண்டார். அவர்கள் பழக்கவழக்கங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்குள் பொருந்திவருமாறு நற்செய்தியை விளக்குவதற்கான வழியையும் தேடத் துவங்கினார். அப்போது கிடைத்ததுதான் “சமாதானக் குழந்தை (Peace Child) என்ற கருத்து! இதை அவர் கண்டுபிடித்தபோது ஊழியத்தில் ஒரு பெரும் திருப்புமுனை ஏற்பட்டது.
இந்த ஸ்ஸாவீ கலாச்சாரத்தில், தொடர்ச்சியாக இருகுழுவினரிடையே நடைபெற்றுக்கொண்டா இருக்கும் சண்டைகளை நிறுத்த, ஒரு தரப்பினர் தங்கள் எதிரிகளுக்கு ஒரு குழந்தையைக் கொடுப்பார்கள். அந்தக் குழந்தை உயிருடன் இருக்கும் வரை, எதிரெதிர் பழங்குடியினருக்கு இடையே சமாதானம் இருக்கும் என்றும் இரு சாராரும் உறுதியளித்துகொள்வார்கள். அதன்பின்னர் குழந்தை ஒரு பெற்றோரின் பொறுப்பில் ஒப்படைக்கப்படும். என்றாலும் ஒட்டுமொத்தக் குழுவும் அந்தப் பிள்ளையைக் கவனமாகப் பார்த்துக்கொள்வார்கள். குழந்தையோ அந்த குழுவின் குழந்தையாகவே பாவிக்கப்படும்.
அந்தக் குழந்தையைத் தத்தெடுக்கும் பெற்றோர்கள், குழந்தையின் நலன்தான் இரு பழங்குடியினருக்கு இடையேயான சமாதானத்தின் அடித்தளம் என்பதை அறிந்து, அந்த சமாதானக் குழந்தையை கவனத்துடன் வளர்ப்பார்கள். அந்தச்சமூகம் சமாதானக் குழந்தையை ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் சின்னமாகத் ஏற்றுக்கொள்ளும். மேலும் அந்தக் குழந்தை கலாச்சாரப் பிரிவுகளை இணைக்கும் தனித்துவமான பங்கைக் அவர்களுக்குள் கொண்டு வளரும். இது ஒரு உருக்கமான அன்பின் நடைமுறையை அவர்களுக்குள் ஏற்படுத்தி சண்டையை சிலகாலத்துக்காவது நிறுத்தி வைக்க உதவியது. அந்தக்குழந்தை ஏதோ ஒரு காரணத்துக்காக மரித்துவிட்டால் அவ்வளவுதான். மீண்டும் மூர்க்கத்தனமான யுத்தம் தொடங்கிவிடும். இருதரப்புக்கும் இடையே அதன்பின் இரத்தக்களறிதான்!.
டான் ரிச்சர்ட்சன் இந்த அன்பின் நடைமுறையைக் கண்டு, அதை ‘இயேசு கிறிஸ்துவின் மூலம் இறைவனின் தியாகம்’ என்ற கிறிஸ்தவ நற்செய்தியை விளக்குவதற்குப் பயன்படுத்திக் கொண்டார். ஒரு பழங்குடி இன்னொரு பழங்குடிக்கு அமைதிக்கான உண்மையான உறுதிமொழியாக சமாதானக் குழந்தையை வழங்குவது போலவே, கடவுளும் மனிதகுலத்துடன் என்றென்றும் அமைதி நிலவ வைக்க இயேசுவை அளித்தார். சமாதானக் குழந்தை போலவே, இயேசுவும் தேவனுக்கும் மற்றும் மனிதருக்கும் இடையே சமாதானத்தை உறுதி செய்வதற்காக உலகத்திற்கு வந்தார் என்றும், அவரது வாழ்க்கை (மற்றும் மரணம்) தேவனது அன்புக்கும் நல்லிணக்கத்திற்கான உறுதிப்பாட்டிற்கும் சான்றாக இருந்தது என்றும் ரிச்சர்ட்சன் போதித்துவந்தார்.
இந்த அறிவுப்பூர்வமான ஒப்புமை ஸ்ஸாவீ மக்களிடையே ஆழமாக எதிரொலித்தது. அதன்விளைவாக பலர் கிறிஸ்தவத்தை தழுவும் வழிக்கு வழிவகுத்தது. இந்த ஒப்புமை ஸ்ஸாவீ மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமாதானக் குழந்தையை வழங்குவதில் உள்ள ஆழமான தியாகத்தை அவர்களால் உணர முடிந்தது. இதன் மூலம், தங்கள் சொந்த கலாச்சாரத்தில் ஆழமாகப் பதிந்திருந்த ஒரு கண்ணோட்டத்தில் இயேசுவின் தியாகத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்துகொண்டனர்.
சத்தியத்தின் தாக்கமும் மரபும்:
ஒவ்வொரு கலாச்சாரத்திலும் சத்தியத்தின் பிரதிபலிப்பு இருக்கிறது என்பதைத்தான் டான் ரிச்சர்ட்சனின் இந்த அணுகுமுறை வெளிக்காட்டுகிறது. அதை அவர் “மீட்பின் ஒப்புமைகள்” என்று அழைத்தார். இந்த கலாச்சார எதிரொலிகள் வழியே தேவனுடைய திட்டம் மற்றும் அன்பைப் பற்றிய ஆழமான, ஆனால் இன்னும் அறிந்து அங்கீகரிக்கப்படாத அறிவை வெளிப்படுத்த முடியும். ஸ்ஸாவீ பழங்குடியினருக்கு இடையேயான அவரது அனுபவங்கள், கிறிஸ்தவக் கோட்பாடுகளை விளக்க, அதே சமயம் அம்மக்களின் பூர்வீக கலாச்சாரங்களையும மதித்துப் பயன்படுத்தும் ஒரு அணுகுமுறைக்கு வழிவகுத்தது.
ரோமர் 1:
அப். பவுல் ரோமருக்கு எழுதிய முதலாம் அதிகாரத்தில், படைப்பின் மூலம் தேவனின் பண்புகள் தெளிவாகக் காணப்படுவதையும், அவரது படைப்பே அவரது நித்திய வல்லமை மற்றும் தெய்வீக தன்மை பற்றிய அறிவை அனைவருக்கும் வழங்குவதையும் பற்றி எழுதுகிறார். மனிதனுடைய இருதயத்தில் படைப்பின்போதே தேவன் எழுதிவிட்ட இந்த அறிவு மற்றும் அதைக்குறித்த உள்ளார்ந்த புரிதல்தான் தேவனத் தேட அவர்களை வழிநடத்த வேண்டும் என்பதற்காக, தேவனே அதைச் செய்திருக்கிறார். காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும் என்று பவுலடிகள் குறிப்பிடுவதைத் தாம் நேரில் கண்டு உணர்ந்ததாக டான் எழுதியிருக்கிறார்.
ஊழியத்தின் நிறைவு, மறைவு:
டான் ரிச்சர்ட்சன் தனது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கற்பித்து, பலருக்கு உத்வேகம் அளித்தார். தனது அனுபவங்கள் மற்றும் ஸ்ஸாவீ மக்களுடன் பழகிய காலத்திலிருந்து கற்றுக்கொண்ட படிப்பினைகள் குறித்து பரவலாகப் பல இடங்களில் செய்தி அளித்தார். நற்செய்திப் பணியில் கலாச்சாரப் புரிதல் மற்றும் அவற்றிற்கான மரியாதையின் தேவையை வலியுறுத்தி, மிஷனரி வட்டாரங்களில் ஒரு சக்திவாய்ந்த குரலாக இருந்தார்.
83 வயதில் 2018 டிசம்பர் 23 அன்று டான் காலமானார். பல்வேறு கலாச்சாரங்களில் கிறிஸ்தவத்தைப் பகிர்வதற்கான ஊழியம் செய்வதில் இருக்கும் புதிய அணுகுமுறையையை விட்டுச் சென்றார். வேறுபட்ட கலாச்சாரங்களை மதிப்பது மற்றும் புரிந்துகொள்வது அர்த்தமுள்ள ஆன்மீக உறவுகளுக்கு எவ்வாறு வழிவகுக்கும் என்பதற்கு அவரது வாழ்க்கைப் பணி ஒரு சிறந்த உதாரணம். ஒருவேளை நீங்கள் இறை ஊழியத்தில் இருந்தாலோ, அல்லது தேவன் உலகில் எப்படி நமக்கு வியப்பளிக்கும் விதத்தில் வெளிப்பட்டிருக்கிறார் என்பதை அறிய விரும்பினாலோ டான் ரிச்சர்ட்சன் எழுதிய புத்தகங்கள் மிகுந்த பயன் அளிக்கும். குறிப்பாக Peace Child (உபயம்: அண்ணன் Mic Yell ) மற்றும் Eternaity in their Hearts என்கிற இரு நூல்கள்.
டேவிட் லிவிங்ஸ்டன் போன்ற பல மிஷனர்மாரைக் குறித்து வாசித்திருப்பீர்களானால், டான் ரிச்சர்ட்ஸனது புத்தகங்கள் ஊழியத்தைக் குறைத்த ஞானத்தையும் இன்னும் புதிய பரிணாமத்தையும் வெளிப்படுத்தும். தேவ ஊழியம் ஆர்வமாக மட்டுமல்ல, கடமையாக மட்டுமல்ல, smart-ஆகவும் செய்யப்பட வேண்டிய ஒன்று என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என்பதும் நிச்சயம்.
பின்குறிப்பு: டான் இந்தியாவுக்கும் வந்திருக்கிறார். வேதத்தைத் தங்களுக்குள் மறைத்திருக்கும் மேற்கு வங்காள மாநிலப் பழங்குடியினரான சந்தாலி இன மக்களில் பழக்கவழக்கங்களையும், ஆச்சரியமான ஒப்புமைகளையும் Enternity in their hearts என்கிற தன் புத்தகத்தில் விரிவாக விளக்கி இருக்கிறார். டான் ரிச்சர்ட்ஸனது முறைகள் குறித்த எதிர் விமர்சனங்கள் இருந்தாலும் ரோமர் 1 இன் அடிப்படையில் அவர் செய்த ஊழியங்கள் கிறிஸ்துவின் அன்பை ருசித்திராத மனிதர் மத்தியில் சரியாகச் செய்யப்பட்டவையே என்பது என் தனிப்பட்ட கருத்து.
நான் Eternity in their Hearts என்கிற நூலை வாசித்தபோது ஸூவாய் மக்களிடத்தில் மட்டுமல்ல, இந்த சமாதானக் குழந்தை என்கிற கோட்பாடு இன்னும் பல ஆதிகுடி மக்களிடத்தில் புழக்கத்தில் இருந்தத்தை டான் ரிச்சர்ட்ஸன் வாயிலாகக் கற்றுக்கொள்ள முடிந்தது. சுமார் 5 ஆண்டுகள் முன் வாசித்த புத்தகம். அன்றிலிருந்தே எழுத நினைத்தது பலமுறை யோசித்ததுண்டு. இன்றுதான் நேரம் அமைந்தது.
(படம் வரைந்தது Geminiயின் Imagen3)